திருகோணமலையில் சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல்..!
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை அருகே டச்பே கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை வளாகத்துக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித அனுமதியும் பெறாது பிக்குவின் தலைமையில் சட்டவிரோத கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன.
கட்டுமானப் பணிகளை பார்வையிடச் சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அங்கு இருந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவோடு இரவாக குறித்த பகுதியில் பெயர்ப்பலகை நடப்பட்டதுடன் கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டும், அதனைத் தொடர்ந்து வேகமாக கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இச்சட்டவிரோத கட்டுமானம் தொடர்பிலாக கரையோர பாதுகாப்புத் திணைக்களம் நேற்று திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகாரொன்றை பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரால் இப்பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
ஆயினும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கு முன்னர் இம்மாதம் 4ஆம் திகதி, விகாரை வளாகத்துக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அந்த கட்டடம் தொடர்பில் மாநகர சபையில் வழக்கு நிலுவையில் இருந்ததாலும், மேலும் விகாரதிபதி கேட்ட ஒருவார அவகாசத்தினாலும் அகற்றம் தாமதமடைந்தது.
இந்த நிலையில் எந்த திணைக்கள அனுமதியும் இன்றி மீண்டும் நிரந்தர கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறித்த பகுதியை செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அங்கு அச்சுறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.
ஊடகவியலாளர் கார்த்திகேயன் மதிய வேளையில் அச்சுறுத்தப்பட்டு;, அவரது கைப்பேசியில் இருந்த படங்களும் கட்டாயப்படுத்தி அழிக்க வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு செய்தி சேகரிப்பதற்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் கே. ஜனந்தன் அவர்கள் கடற்கரை சவுக்குக் காட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார். தம்மை அரச புலனாய்வாளர்கள் என்றும் பௌத்த சங்க தலைவர் என்றும் கூறிக்கொண்ட நபர்களே தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்;.
மேலும், கடந்த ஆண்டு தியாகி திலீபன் நிகழ்வின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட அதே குழுவினரும் இங்கு விகாரை கட்டுமானத்தில் செயல்பட்டதாகவும், பொலிசார் அருகிலிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் புதிய அரசாங்கம் இனவாத நோக்கத்துடன் செயல்படுகின்றதன் வெளிப்பாடாக இருப்பதுடன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும், தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றதற்கும் மேலும் ஒரு அடையாளமாக இருப்பதாக ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை சட்ட விரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை நேற்று இரவு 11.15 மணியளவில் அகற்றப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அமைச்சர் ஆனந்த விஜேபால தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்ததாக எமது திருகோணமலை பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

