யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை..!
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது நல்லூர் பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (14.11.2025) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது.
இவ் நடமாடும் சேவையில் நல்லூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் கெளரவ இ. ஜெயகரன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சார்பான ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், மாநகர சபையின் உறுப்பினருமானதிரு. எஸ். கபிலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரைணையுடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடமாடும் சேவையானது இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக பிரதேச செயலக ரீதியாக இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், மக்களை ஒரே இடத்தில் சங்கமிக்க செய்து அவர்களது பல்வேறு தேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக சேவை வழங்குதலை நோக்காக கொண்டு இவ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நல்லூர் பிரதேச செயலகமானது இம் முறை சுற்றாடல் சார்ந்த சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்டமைக்கும் மற்றும் சிறந்த சமூக வலைத்தளம் என்ற விருதுகளை பெற்றுக்கொண்டமைக்கு பாராட்டுக்களை அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன் அதற்கமைவாக இந்த நடமாடும் சேவையையும் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெடுத்துள்ளமையை அவதானிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சேவை நாடிகளின் விவரங்களை பதிவு செய்யும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் கடந்த முறை நடைபெற்ற அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலில் கவனத்தில் கொண்டு வந்தமைக்கு அமைவாக இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கும் இச் செயலி பகிரப்பட்டுள்ளதாகவும், இதற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளையும் அரசாங்க அதிபர் தெரிவித்துடன்,
இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது அனைத்து சேவை நாடிகளில் தேவைகளை அவதானிக்க கூடியதாக இருக்கும் என்றும் சேவை நாடிகளின் விவரங்கள் தொடர்பான முழுமையான பரிசீலனையை மேற்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும், இந்த நடமாடும் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக அதிக பொதுமக்கள் வருகை தந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தாலும், இவ்வளவு சேவைகளை பெறும் தேவையுடையவர்கள் இருந்துள்ளார் என்று எண்ணும் போது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு முதலாவது நாளில் சேவை நாடிகளை நடிச்சென்று சேவை வழங்குதல் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது சேவையை சரியாக ஆற்றும் போது பொதுமக்களுக்கான சேவைகள் வினைத்திறனாக பூர்த்தி செய்யக் கூடியதாக அமையும் என்றும் இவ்றான நடமாடும் சேவையின் ஊடாக பயன்பெறுபவர்களில் 50 வீதமானவர்களின் தேவைகள் முற்றாக பூர்த்தி செய்யப்படுமேயானால் அது ஒரு வினைத்திறனான நடமாடும் சேவையாக அமையும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்து, இவ் நடமாடும் சேவையை தாயர்ப்படுத்திய பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும்,
இந் நிகழ்வில் சக்கரநாற்காலி, செவிப்புலனற்றவர்களுக்கான கருவிகள், மூக்கு கண்ணாடி, மரக்கன்றுகள், மாணவர்களுக்கான புத்தகப் பை, தையல் இயந்திரம், விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள், நீண்ட கால படுக்கையில் உள்ளவர்களுக்கான கட்டில், என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதுடன், பொலித்தீன் பாவனையினை நிறுத்துவதற்கு முன்னேற்பாடாக துணி பை, இலைக் கஞ்சி என்பன பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், இதுவரை திருமணப் பதிவு செய்யாதிருந்த 05 தம்பதிகளுக்கு திருமண பதிவும் செய்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி. யசோதா உதயகுமார், உதவிப் பிரதேச செயலாளர் திரு. இ. சிவகரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


