வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..!

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..!

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை வகிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெறும் விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது, இன்றைய வாக்கெடுப்பில் எங்கள் தமிழரசுக் கட்சி அரசு சார்பாகவும் இல்லை, அரசுக்கு எதிராகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் 2026 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஏகமானதாக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான முடிவு. நாம் எமது கட்சி ஜனாதிபதியின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவார், தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வார், எமது மக்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை கொண்டுவருவார்.

 

பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கருத்துக்களை கேட்பார், நிலப்பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்தான் ஏகமனதாக கட்சியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

நாங்கள் எதிர்க்க வேண்டிய நான்கு ஆண்டுகள் இன்னும் எங்களுக்கு உள்ளன

 

அடுத்த ஒரு ஆண்டிற்குள் எந்த முன்னேற்றமும் இல்லையெனில், அடுத்த ஆண்டு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராக இருக்கிறோம்.

 

தமிழரசு கட்சி இன்று வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பது நாம் அரசுடன் செயல்பட தொடர்ந்து தயாராக உள்ளோம் என்பதைக் காட்டும் ஒரு முக்கியமான செய்தியாகும்.

 

அத்துடன் எனது தகப்பனாரின் இறுதி அஞ்சலியில் பங்குபற்றிய மற்றும் துக்கம் விசாரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin