மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றா நோய் தொடர்பான தெளிவூட்டல்..!
தொற்றாநோய்கள் தொற்று நோய்களை விட அதிகமான வேகத்தில் வியாபித்து வரும் இன்றைய கால கட்டத்தில் இந்நோய்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்தின் வழிகாட்டுதலில் நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விளிப்பூட்டும் நிகழ்வில், தொற்றா நோய்களின் வகைகள், தொற்றா நோய்களும் எமது உணவுப் பழக்க வழக்கங்களும், அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகள், தொற்றா நோய்களுக்கான மாத்திரைப் பயன்பாட்டு விடயத்தில் செலுத்த வேண்டிய கவனம் போன்ற விடயங்கள் தொடர்பான மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெளிவுபடுத்தினர்.
சின்னம்மைத் தொற்று நோய் முற்றாக ஒழிக்கபட்டுள்ள நிலையில், தொற்றா நோய்கள் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகவும், 80% வீதமாகவும், தொற்று நோய்கள் 20% வீதமுமாக பீடித்து வருகின்றன. இந்நோய்கள் ஆயுட்கால மாத்திரை உண்ணும் நோய்களாகவும் உருவெடுத்துள்ளன.
குறிப்பாக சலரோகம், உயர் குருதி அமுக்கம், புற்றுநோய் மற்றும் இருதய நோய் என நீண்டகாலத் தொற்றா நோய்கள் மனித வாழ்விற்கு சவாலாக மாறியுள்ளன.
வாரத்திற்கு 180 நிமிடங்கள் கடின செயற்பாட்டில் ஈடுபடுதல் உடற்பயிற்சியாகக் கருதப்படுவதுடன், ஒருவர் 4 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஒரு அமர்வில் உட்கார்ந்திருப்பது தொற்றா நோய்க்கு ஏதுவான பிரதான காரணி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உடற்பயிற்சி, உணவு விடயத்தில் அதிக அக்கறையுடன் அவதானமாக இருக்குமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ. உதயகுமார், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. மணிமாறன் ஆகியோர் வளவாண்மை வழங்கியதுடன், மாவட்ட செயலகத்தின் சகல பிரிவுகளிலிருந்தும் பல உத்தியோகத்தர்கள்; பலர் கலந்துகொண்டனர்.


