மாலை தீவில் ‘வருங்காலத் தலைமுறைக்கு’ புகையிலைத் தடை சட்டம் அமல்: உலகின் ஒரே நாடு !!
மாலை தீவில் சனிக்கிழமை முதல் தலைமுறைகளுக்கான புகையிலைத் தடை (Generational Prohibition on Tobacco) சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம், இத்தகைய தடையை நடைமுறைப்படுத்திய உலகின் ஒரே நாடாக மாலை தீவு மாறியுள்ளது.
ஜனவரி 2007க்குப் பிறந்தவர்களுக்குத் தடை
இந்தச் சட்டம், ஜனவரி 1, 2007 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் பொருந்தும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு அவர்களால் இந்தக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
“பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதும், புகையிலை இல்லாத தலைமுறையை மேம்படுத்துவதும்” இந்தத் தடையின் இலக்கு என்று சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதியின் கீழ், 2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மாலை தீவுக்குள் புகையிலைப் பொருட்களை வாங்குவதோ, பயன்படுத்துவதோ அல்லது அவர்களுக்கு விற்பனை செய்வதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை, அனைத்து வகையான புகையிலைப் பொருட்களுக்கும் பொருந்தும். சில்லறை விற்பனையாளர்கள் விற்பனை செய்வதற்கு முன்னர் வயதுச் சான்றிதழைச் சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீறினால் கடுமையான அபராதம்
சிறுவர் அல்லது இளம் வயதினருக்குப் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை வணிகர்களுக்கு 50,000 ருஃபியா (சுமார் $3,200) அபராதம் விதிக்கப்படும்.
சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்
சுமார் 1,191 சிறிய பவளத் தீவுகளைக் கொண்ட மாலை தீவு, உலகின் ஆடம்பரச் சுற்றுலாக் கேந்திரமாக அறியப்படுகிறது. இந்நிலையில், இந்த விரிவான தடையானது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்.
இந்தத் தடையின் கீழ், மின்னணு சிகரெட்டுகள் (e-cigarettes) மற்றும் வேப்பிங் (vaping) தயாரிப்புகளின் இறக்குமதி, விற்பனை, விநியோகம், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட வேப் சாதனங்களைப் பயன்படுத்தும் நபர்களுக்கு 5,000 ருஃபியா அபராதம் விதிக்கப்படும்.
வரலாற்றுக் குறிப்பு:
முன்னதாக நியூசிலாந்து, இத்தகைய தடையைச் சட்டமாக்கிய உலகின் முதல் நாடாக இருந்தது. ஆனால், அது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள்ளாகவே, கடந்த நவம்பர் 2023இல் இரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

