சர்வ ஜன நீதியின் ஏற்பாட்டில் வைத்தியருக்கான நினைவுதினம் அனுஷ்டிப்பு..!
சர்வ ஜன நீதி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலைக்காக நீதி கோரி போராடி உயிர்நீத்த வைத்தியர் மனோகரனுக்கான நினைவுதின நிகழ்வு சனிக்கிழமை (27) மாலை திருகோணமலை மாநகர சபை பொது மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலைக்காக நீதி கோரி வைத்தியர் மனோகரன் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் அந்த சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் மற்றும் அதற்கான நீதி மறுப்புகள் தொடர்பிலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
குறித்த நிகழ்வில் சட்டத்தரணி பவானி பொன்சேகா, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த 5 மாணவர் படுகொலைக்குப் பின்னராக வெவ்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நீதி கோரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, ஊடகவியலாளர்களான நவரெட்ணம், கீதபொன்கலன், ஹயக்கிரீவன், ராஜேஸ் ஆகியோர் குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பிலான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாநகரசபையின் முதல்வர் க.செல்வராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


