கிளிநொச்சி மாவட்ட காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று(26.09.2025) வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்றுடன் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பிணக்கின்றி ஆட்சி செய்து வருகின்ற மக்களுக்குரிய காணிகளின் ஆவணங்களை அவர்களுக்கு விரைந்து வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அண்மையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான பொறிமுறையை உருவாக்குமாறும் மாகாணக் காணி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் :
பொதுமக்கள் எதிர்கொள்ளும் காணி பிரச்சினை தொடர்பில் நடமாடும் சேவைகள் நடத்தி தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பிணக்குகள் இல்லாமல் ஆட்சி செய்து வருபவர்களுக்கான காணி ஆவணங்களை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் அதிலுள்ள சவால்கள் தொடர்பில் மாவட்டச் செயலர் குறிப்பிட்டார். இதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குவதற்கும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

மாவட்டச் செயலரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி முடிப்பதற்கான மேலதிக ஆளணிகளை யாழ். மாவட்டத்திலிருந்து பெற்று இலக்கை நிர்ணயித்து செயற்படுத்தி முடிக்குமாறும் அதற்குரிய கொடுப்பனவுகள் உள்ளிட்ட ஏனைய விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய கோரிக்கைகளை உரிய நடைமுறைக்கு அமைவாக விண்ணப்பிக்குமாறும் மாகாண காணி ஆணையாளர் ஆர்.குருபரனுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காணிப் பிணக்குகளுடன் தொடர்புடைய நடைமுறை ரீதியான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, வடக்கு மாகாணம் போரால் பாதிக்கப்பட்டது என்பதையும், போரால் ஆவணங்கள் அழிவடைந்தது என்பதையும் கருத்திலெடுத்து விசேடமாக கவனம் செலுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தேவையேற்படின் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு ஏதுவான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் காணி ஆணையாளருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்தார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளும் ஆராயப்பட்டன. பளை பிரதேச செயலர் பிரிவில் காணி ஆவணங்கள் வழங்கப்பட்டு அதில் தற்போதுள்ள சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கவும் ஆளுநரால் பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும் பளை மற்றும் பூநகரி பிரதேச செயலர் பிரிவிலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை வழங்குவது தொடர்பிலும் சில அறிவுறுத்தல்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வடக்கு மாகாண பிரதிப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் காணி பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin