பழைய பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடக யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விளையாட்டு த்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (25.09.2025) பி.ப 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், பழைய பூங்காவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் உடற்பயிற்சிக்கான நடைபாதையினை மேம்படுத்துவதற்கும், சிறுவர்கள் விளையாடும் போது அவர்களுடன் வருகை தரும் பெற்றோர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்களை பொருத்துவதற்குமான மதிப்பீடுகளை உள்ளடக்கிய முன்மொழிவினை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான முன்மொழிவு கிடைத்தவுடன் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் நிதியினை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், விளையாட்டுப் பாடசாலையான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் ஆராய்ந்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர், புவிச்சரிதவியல் உதவிப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் திருமதி சி. எஸ். ஆர். செல்வகுணாளன், பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளர் திரு. ஆர். ஜனதன், மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. எல். அனுராகாந்தன், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிநிதி திரு. தனராஜ், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


