முழங்காவில் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்பு..!
பூநகரி-முழங்காவில் பகுதியில் உள்ள உணவகங்களில் பொதுசுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையின் போது பெருமளவான மனித பாவனைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தலைமையில் பொதுசுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட திடீர் உணவுப்பாதுகாப்பு பரிசோதனைகளின்போது,
சமைத்து கொத்துரொட்டிக்காக வெட்டப்பட்ட றொட்டியுடன்- சமைக்காத இறைச்சியை ஒன்றாகப் பேணியமையினால் இறைச்சியின் இரத்தத்தால் மாசான நிலையில் ஆழ்குளிரூட்டியில் பேணப்பட்ட உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் வெப்பம், கடும் புகையுடன் வேலை செய்பவர் சுவாசிக்கச் சிரமப்படுமளவு மோசமான நிலையில் காணப்படும் சமையலறை, உணவுக்கழிவுகளை வெளியில் வெளியேற்றல், மூடியற்ற குப்பக்கூடைகளைப் பேணல், வெப்பமான உணவுகளுடன் பிளாஸ்டிக் உபகரணப் பாவனை, மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாளுதல், தூசு ஈயினால் உணவுப் பொருட்கள் மாசடையக்கூடிய வகையில் உணவு பரிமாறும் இடம் காணப்பட்டமை போன்ற சுகாதார குறைபாடுகளுக்காக கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

