பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!

பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(17.09.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மு.ப 9.00 தொடக்கம் பி.ப 2.30 மணி வரை நடைபெற்றது.

 

இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலம் என்பதற்கு அமைவாக மாணவர்களாகிய உங்களுடைய ஆளுமைகளை விருத்தி செய்துகொள்வதோடு சக மாணவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் அவர்களை ஆற்றுப்படுதத்க் கூடியவர்களாகவும் திகழவேண்டும் என்றும் இவ்வாறான வாய்ப்புக்களை பயன்படுத்தி உங்கள் ஆளுமைகளை விருத்தி செய்து கொள்வதை நீங்கள் ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக்கொள்வதோடு மாறிவரும் இன்றைய சூழல் போக்கை உரியமுறையில் சாதகமாக பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரும் தங்கள் குடும்ப நிலையை புரிந்து அதற்கேற்ற வகையில் நேரான பாதையில் முன்னேறிச்செல்ல வேண்டும் என்றும் மாறிவரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் உங்கள் ஆளுமைப்பண்புகளை விருத்தி செய்து வெற்றியடைய வேண்டும் என தெரிவித்தார். மேலும் பாடசாலை நிர்வாக கட்டமைப்புக்களை சீராக நடத்துவதற்கு மாணவர்களாகிய நீங்களே பக்கபலம் என்றும் குறை கூறும் சமூகத்தில் இருந்து நாம் மாற வேண்டுமானால் மாணவர்களாகிய நீங்கள் மாற வேண்டும் எனவும் வீட்டுச்சூழல் ஆரோக்கியமானதாக இருப்பதில் மாணவர்களாகிய உங்களது பங்கு அளப்பரியது எனவும் தெரிவித்தார்.

 

இவ் நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கங்களாக மாணவ தூதுவராக செயல்படும் மாணவர்கள் சவால்களாக காணப்படும் பிரச்சினைகளை அறிவார்ந்த ரீதியாக சிறப்பாக பகுப்பாய்வு செய்து தேர்வுகளை காண்பதற்காக பயிற்றப்படுவதுடன் ,சிறுவர்நேய சூழல் மலர்வதை உறுதிப்படுத்துவதும், பொறுப்பு கூறும் மாணவ சமூகம் உருவாக்கப்படுவதையும் எதிர்பார்ப்பாக காணப்படுவதுடன் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கையை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

 

இச்செயலமர்வில் ” ஆளுமை மேம்பாடும் உளநோய் குறைபாடுடைய மாணவர்களை கையாளும் நுட்பங்களும்” தொடர்பாக அடம்பன் ஆதார வைத்தியசாலையின் உளமருத்துவர் திரு.க.சிவசுதன் அவர்களும் “கட்டுக்காவல் சட்டங்கள் மற்றும் சிறுவர்களின் அடிப்படை மனித உரிமைகள்” தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் திரு.T. கனகராஜ் அவர்களும் எண்ணக்கரு தொடர்பான கருத்தமர்வினை சங்கானை பிரதேச செயலக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு .இ.ராவிராஜ் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

 

இதில் மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர்களான இ.செந்தூரன் மற்றும் பா.கோபி, பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவ முதல்வர்கள் மற்றும் தலைவர்கள் ,பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin