ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியது..!
வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (17.09.2025) நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் கருத்துத் தெரிவித்த போதே ஆளுநர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வடக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கான ஆசிரிய ஆளணி மேலதிகம் என்று தரவுகளில் குறிப்பிடப்படுகின்றது. அப்படியானால் அந்தப் பாடங்களுக்கு வடக்கிலுள்ள எந்தவொரு பாடசாலையிலும் வெற்றிடம் இருக்கக் கூடாது.ஆனால் நடைமுறையில் அவ்வாறான நிலைமை இல்லை. இந்த ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி ஒத்துழைக்கவேண்டும்.
, புதிதாக நியமிக்கப்பட்ட இளம் அதிபர்களின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கனவாக உள்ளன. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அடிக்கடி பாடசாலைகளுக்கு களப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாடசாலைகளின் தேவைப்பாடுகளைக் கண்டறிய வேண்டும். சில பாடசாலைகள் நேரடியாக வெளியாட்களிடம் உதவிகளைக் கேட்கின்றனர். அரசாங்கத்தின் நிதியுதவியில் செய்யக் கூடிய விடயங்களைக்கூட வெளியாட்டகளிடம் கேட்கின்றனர். இவ்வாறான செயற்பாடு எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
எந்தவொரு பாடசாலைகளும் உரிய நிர்வாக நடைமுறைக்கு மாறாக இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது. அதேநேரம் எந்த நிதியாக இருந்தாலும் அது தொடர்பான வெளிப்படைத்தன்மையும் அவசியம். ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் ஆசிரிய ஆளணி தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத் தளம் புதுப்பிக்கப்பட்ட தரவுத் தளத்துடன் தொடர்ச்சியாக இயங்கவேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்;
ஒரு வலயத்தினுள்ளேயே ஒரு பாடசாலையினுள் மேலதிக ஆசிரியர்களும் அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படும் நிலைமை இருக்கின்றது. இதனை மறுசீரமைக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பல தடவைகள் அறிவுறுத்தியுள்ளேன். ஒரு சில வலயங்கள் மாத்திரமே அதனைச் செய்து முடித்துள்ளன. ஏனைய வலயங்கள் ஒரு வாரத்தினுள் இதனைச் செய்து முடிக்க வேண்டும்.
மேலும் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக, யாழ். மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்குரிய விடுவிப்புக் கடிதம் வலயக் கல்விப் பணிப்பாளர்களால் வழங்கப்பட்ட பின்னரும், ஒரு சில அதிபர்கள் அந்த ஆசிரியர்களை தமது பாடசாலைகளில் கையெழுத்திடுவதற்கு தொடர்ந்தும் அனுமதிக்கின்றனர். இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன்,
நிர்வாக நடைமுறைகளை ஒழுங்காக அனைவரும் பின்பற்ற வேண்டும். வலயக் கல்விப் பணிப்பாளர்களால் விடுவிக்கப்பட்ட பின்னரும் புதிய நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட வேண்டும். அதேபோல அதிபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆசிரிய ஆளணிச் சீராக்கத்தையும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் செய்யவேண்டும். இந்த விடயத்தில் நானே நேரடியாக பாடசாலைகளுக்குச் சென்று கள ஆய்வை முன்னெடுப்பேன், என்று பிரதம செயலர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, வடக்கு மாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம், கலாசார அலுவல்கள் பிரிவு, விளையாட்டுத் திணைக்களம் என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றம் விரிவாக ஆராயப்பட்டது. திட்டங்களின் தாமதம் அதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்ட தீர்வுகளும் பரிந்துரைக்கப்பட்டன.
அத்துடன் கல்வித்துறை தொடர்பில் பாடசாலைச் சமூகம், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களாலும் ஆளுநருக்கு நேரடியாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஆளுநர் கேள்வி எழுப்பினார். சீர்செய்யப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆளுநர் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, பொறியியல், பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலின் திட்டப் பணிப்பாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர், கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


