பாதாள உலக குழுக்களுக்கு வெடிபொருட்களை வழங்கிய இராணுவ லெப்டினன்ட் கேணல் கைது
இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக ‘கொமாண்டோ சலிந்தா’வுக்கு ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அதிகாரி மல்லாவி பாலநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய போது மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், இரண்டு தனித்தனி கொடுக்கல் வாங்கல்களில் 200 மற்றும் 60 ரவுண்டுகள் என 260 ரி-56 ரவுண்டுகளை 650,000 ரூபாவிற்கு விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அதிகாரி 2017 ஆம் ஆண்டு கொமாண்டோ படைப்பிரிவு மையத்தில் கடமையாற்றியிருந்ததாகவும், அந்த காலப்பகுதியில் ‘கொமாண்டோ சலிந்தா’ அவரது கட்டளையின் கீழ் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

