திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டி பிரிவு சுகாதார அமைச்சரினால் ஆரம்பித்து வைப்பு..!
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் (JAICA) இலங்கையில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கும் அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்படவுள்ளன.
இதன் முதலாவது அலகை திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், நிறுவுவதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (5) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா ஆகியோரின் பங்கேற்புடன் தொடங்கி வைக்கப்பட்டன.
இதன் போது அமைச்சர் உரையாற்றுகையில், ஜப்பான் நாட்டு மக்களின் நிதி உதவியுடன், கிழக்கு மாகாணத்துக்கான 8 மாடி கட்டடங்களை கொண்ட பிரதான இருதய சத்திர சிகிச்சை பிரிவு திருகோணமலை அமைய உள்ளதாகவும், இன்னும் ஆறு மாதங்களில், அதற்கான நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கூறுகையில், சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், அரசாங்கம் நாட்டில் ஐந்து வைத்தியசாலைகளை நவீனமயப்படுத்த திட்டங்கள் தீட்டிருப்பதாகவும், அதில்
திருகோணமலை வைத்தியசாலையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று, நாட்டில் உள்ள 15 அரச வைத்தியசாலைகளுக்கு அதிநவீன தொற்று கழிவு எரியூட்டிகளின் அலகுகள் நிறுவப்பட உள்ளன. அதில் இன்று, திருகோணமலை வைத்தியசாலையிலே முதலாவதாக
ஆரம்பித்துள்ளோம். இதுவும் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும், அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமையவே என்றும் தெரிவித்தார்.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான விமான நிலைய அபிவிருத்தி திட்டம், கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டம், கொத்மலை நீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட அநேக நீர் மற்றும் வீதி அபிவிருத்திக்காக, ஜப்பானிய அரசாங்கம் அதிகமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்காக அந்த அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும், இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் இயங்கி வரும், இருதய சிகிச்சை பிரிவையும் அமைச்சர் சென்று பார்வையிட்டதோடு, அவற்றின் செயற்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.
இதன்போது திருகோணமலை வைத்தியசாலை தாதியர்களின் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் நாயகம் அசேல குணவர்த்தன, ஜெயிகா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கெஞ்சு குருநோமோ, திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் சந்தமாலி, கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள ஊழியர்கள், மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


