எல்ல பேருந்து விபத்து: ஜீப் சாரதி கைது
எல்லவில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கு காரணமான ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து விபத்திற்குள்ளாவதற்கு முன்னர், ஜீப் வண்டியுடன் மோதியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வியாழக்கிழமை இடம்பெற்ற எல்ல பேருந்து விபத்தில் தங்காலை நகர சபையின் 13 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதி அமைச்சர் ருவான் சேனாரத் தெரிவித்துள்ளார்.
தங்காலை நகர சபை செயலாளர், 12 சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பேருந்தின் சாரதி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.
அத்துடன், ஒரு பெண் காணாமல் போயுள்ளதாகவும் ருவான் சேனாரத் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, விபத்து தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படை (SLAF) டியதலாவையில் MI-17 ஹெலிகொப்டர் ஒன்றையும், வீரவில விமானப்படைத் தளத்தில் Bell 412 ஹெலிகொப்டர் ஒன்றையும் தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டு செல்வதற்கும், தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த ஹெலிகொப்டர்கள் தயாராக உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
வெல்லவாய நோக்கி பயணித்த பேருந்து, ஜீப் வண்டியுடன் மோதி பள்ளத்தில் பாய்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 30 பேர் இருந்துள்ளதுடன், 6 ஆண்களும் 9 பெண்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

