அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். துல்சா (USS Tulsa – LCS 16) என்ற கடலோரப் போர் கப்பல் எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோக தேவைகளுக்காக ஆகஸ்ட் 27 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
பல்துறைத்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட யு.எஸ்.எஸ். துல்சா, ஆழமற்ற கடலோர நீர்பரப்பு மற்றும் திறந்த பெருங்கடல் ஆகிய இரண்டிலும் செயற்படக்கூடியது.
இந்த விஜயம், இலங்கை கடற்படையுடன் இணைந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ‘கடற்படைகளின் கூட்டு தயார்நிலை மற்றும் பயிற்சி’ (CARAT) பயிற்சிகளைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதைக் குறிக்கிறது.
இலங்கையின் அன்பான வரவேற்புக்கு அமெரிக்க தூதரகம் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன், இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்புப் பங்காண்மை, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியம், பாதுகாப்பான கடல் வழிகள் மற்றும் பிராந்திய செழிப்பு ஆகியவற்றிற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் சின்னமாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
சிறிய தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் வாகனங்களுடன் தாக்குதல் படையினரை ஏற்றிச் செல்லும் திறனையும் யு.எஸ்.எஸ். துல்சா கொண்டுள்ளது. இது LCS 16-ஐ ஒரு வலிமையான சக்தியாகவும், வெவ்வேறு பணித் தேவைகளுக்கு ஏற்றவாறு மாறும் தன்மையுடனும் ஆக்குகிறது.
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான துல்சாவின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த கப்பல், பிப்ரவரி 16, 2019 அன்று சான் பிரான்சிஸ்கோவில் சேவையில் இணைக்கப்பட்டது.
‘Tough, Able, Ready’ (‘கடினமான, திறமையான, தயார்நிலை’) என்ற இலட்சியத்தைக் கொண்டு வழிநடத்தப்படும் யு.எஸ்.எஸ். துல்சா, 57mm கடற்படை துப்பாக்கி, ஏவுகணை செலுத்தும் கருவிகள் மற்றும் பல தாக்குதல் திறன்களுடன் ஆயுதம் ஏந்தியதாக உள்ளது.
இது அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதன் மூலமும் கடல்சார் பாதுகாப்பை ஆதரிப்பதன் மூலமும், பிராந்தியத்தை பாதுகாப்பாகவும் ஸ்திரமாகவும் வைத்திருக்க இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது

