உப்புக்கேணி குளத்துக்கு பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட வேண்டும்..!
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளத்திற்கு உடனடியாக நகரசபையினரால் பாதுகாப்புச் சுவர் அல்லது இரும்பிலான வேலி அமைக்கப்பட வேண்டும் என கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கமானது நகரசபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
கோவிற்குடியிருப்பு-உப்புக்கேணிச் சூழல் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியாக காணப்படுவதனால் நகரசபை குளத்தினை ஆழப்படுத்தி நீரின் கொள்ளளவை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தது.
இருப்பினும் நீண்ட காலமாக உப்புக்கேணிக் குளமும் அதனோடு இணைந்த வீதியும் புனரமைப்புச் செய்யப்படாமையால் வீதியின் பெரும் பகுதியை குளம் ஆக்கிரமித்து விட்ட நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் மாரி காலத்திலும்-இரவு வேளைகளிலும் உப்புக்கேணி வீதி ஊடாக பயணிப்போர் தவறுதலாக குளத்திற்குள் விழக்கூடிய அபாய நிலை இருப்பதனால் உடனடியாக மாரி காலத்திற்கு முன்பாக குளத்தின் இரு கரைப் பகுதிகளுக்கு பாதுகாப்பு சுவர் அல்லது வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்-குள அபிவிருத்தி மற்றும் வாய்க்கால் அமைப்பிற்கென நகரசபையின் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 7மில்லியன் ரூபாய் நிதியை இந்த தேவைப்படுகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி கிராம அபிவிருத்திச் சங்கக் கலந்துரையாடலில் சங்கத்தின் தலைவர் த.சுபேசன்,சாவகச்சேரி நகரசபையின் கோவிற்குடியிருப்பு கடல் வட்டார உறுப்பினர் சுபோதினி,சங்கத்தின் செயலாளர் தர்ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

