விசுவமடு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் அரிசி ஆலையை பார்வையிட்ட அமைச்சர்..!
வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் இயங்காத சொத்துக்களை மீள இயங்கி வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பத்து ஆண்டுகளாக பயன்பாட்டின்றி இருந்த விசுவமடு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரிசி ஆலையின் தற்போதைய செயல்திறனை நேரில் பார்வையிடும் நோக்கில், வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க 12.08.2025 செவ்வாய்க்கிழமை களவிஜயம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில், அமைச்சின் பிரதியமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி திரு அகிலன் கதிர்காமர், வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாய உற்பத்தி கூட்டுச்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வங்கியின் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் திரு வசந்த சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்;
“எமது அரசாங்கம் கூட்டுறவு துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உறுதியாக செயல்பட்டு வருகின்றது. அதன் அடுத்த கட்டமாக ஆயிரம் உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். அதற்கு வலுசேர்க்கும் வகையில், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் இயங்காத சொத்துக்களை மீள இயக்கும் திட்டத்தின் கீழ், இந்த நவீன அரிசி ஆலையை செயல்படுத்தியிருப்பது பாராட்டத்தக்க செயலாகும்.”
“இந்த ஆலையை முழுமையாக இயங்கச் செய்யும் வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பிரதேச விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாய விலையில் கொள்வனவு செய்து, அதனை அந்தப் பிரதேச மக்களுக்கே நியாயமான விலையில் அரசியாக விற்பனை செய்ய முடியும்.”
மேலும், வடக்கு மாகாணத்தில் இயங்காத நிலையில் உள்ள தொழிற்சாலைகளை மீள செயல்படுத்தும் நோக்கில், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் சொத்துக்களை மீள இயக்கும் திட்டத்திற்கு வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் என அமைச்சர் உறுதியளித்தார்.

