முல்லைத்தீவில் இராணுவ முகாமில் தாக்குதல்: ஒருவர் பலி – பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நியாயமான விசாரணைக்கு அழைப்பு முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் நுழைந்த இளைஞர்கள் குழு தாக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இன்று (9) கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், இளைஞர்கள் இராணுவ முகாமிற்குள் தாக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பி ஓடியவர்களில் ஒருவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடி, சம்பவம் குறித்த தகவல்களைக் கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார். மேலும், வட மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், முல்லைத்தீவு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடனும் தான் தொடர்பு கொண்டு பேசியதாக அவர் தெரிவித்தார்.
காவல்துறையினர் விசாரணைகளை பாரபட்சமின்றி நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும், அவர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
விசாரணைகள் உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜெகதீஸ்வரன் வலியுறுத்தினார்.

