யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு பகுதியில் உள்ள நூற்றக்கணக்கான பனை மரங்கள் நேற்று மாலை சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டைக்காடு இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்திற்கு முன்பாக உள்ள இந்த மரங்கள் திடீரென தீப்பிடித்ததையடுத்து, இராணுவ வீரர்கள் தீயணைப்பு வாகனத்தை அழைத்தனர்.
அத்துடன், மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்து 200 படையினர் தீயை அணைக்க உதவுவதற்காக வரவழைக்கப்பட்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் முதன்முறை நடப்பதல்ல என கட்டைக்காடு இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இதே பனை மரங்களை குறிவைத்து, இதேபோன்ற பல தீ வைப்புச் சம்பவங்கள் முன்னரும் நடந்துள்ளன.
அந்த அதிகாரியின் கூற்றுப்படி, உள்ளூர்வாசிகள் பனை ஓலைகளை வெட்டவும், நுங்கு எடுக்கவும் அடிக்கடி அந்தப் பகுதிக்குச் செல்கிறார்கள், அவர்களை இராணுவம் ஒருபோதும் தடுக்கவில்லை. ஆயினும், ஒரு சில நபர்கள் இத்தகைய அழிப்புச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்திய நபர்கள் பனை மரங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என இராணுவம் சந்தேகிக்கிறது.

