போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லை..! அமைச்சர் சந்திரசேகர்
போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து வறுமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பிராந்திய தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு இன்று விஜயம் செய்த அவர், அங்கு உத்தியோகத்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அமைச்சருடன் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரும் விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் மட்டும் 16,000 ஏக்கர் காணியில் தென்னை பயிர் செய்யப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போது அந்தக் காணிகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.
வடக்கில் வறுமை பரவலாக உள்ளது.
போரால் அனைத்தையும் இழந்த மக்களின் வாழ்க்கை மீண்டும் மலர வேண்டும். வறுமை ஒழிப்பு எமது அரசாங்கத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும்.
வறுமையை ஒழிக்காமல் நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க முடியாது என்றும், தென்னைப் பயிர்ச் செய்கையை சரியாக கையாளும்பட்சத்தில் எதிர்காலத்தில் இப்பகுதியில் செழிப்பான பொருளாதாரம் உருவாகும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து தெரிவித்தார்

