யாழ். இந்திய துணைத் தூதரக வாகனம் விபத்து: அதிகாரிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம், ஜூலை 22, 2025: யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பிரதான வீதியில், கந்தர்மடம் சந்தியில் இன்று இரவு 10 மணியளவில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்திய துணைத் தூதரக வாகனம் ஒன்றும், கந்தர்மடம் பகுதியிலிருந்து யாழ். நகர் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் இந்திய துணைத் தூதரக வாகனத்தில் பயணித்த அதிகாரிகளும், காரின் சாரதியும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin