மாணவர்களை உள நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு
பாடசாலை மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான பயிற்சி செயலமர்வு
மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இச் செயலமர்வின் நோக்கமானது பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விளங்கி அவர்களை எவ்வாறு ஆற்றுப்படுத்துவது என்றும், அவர்களை உள நெருக்கடிகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்தல் என்றும் குறிப்பிட்டு, மாணவர்களை உள நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள்வதுஎன்பதிலும் சூழலை ஆரோக்கியமாக பேணுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டு, இன்றைய செயலமர்விற்கு மிகவும் பொருத்தமான வளவாளர்கள் கருத்துரைகளை வழங்கவுள்ளதாகவும், அந்த வகையில் உளமருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவதாஸ் அவர்களினால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களை பாடசாலைகளில் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.
இவ் செயலமர்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளமருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவதாஸ், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் திரு. ரி. கனகராஜ் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. ரவிராஜ் வளவாளர்களாக கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினார்.
இச் செயலமர்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


