மொறட்டுவையில் கள்ள நோட்டுகளுடன் பெண் கைது; அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல்!
பொலிஸாரின் தகவலின்படி, மொறட்டுவையில் கள்ள நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொறட்டுவை, ராவதாவத்தையைச் சேர்ந்த 52 வயதுடைய குறித்த சந்தேகநபர், (ஜூலை 14) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பத்து போலி 5,000 ரூபா நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் பின்னர், பொலிஸார் அவரது இல்லத்தில் சோதனை நடத்தினர். அங்கு கள்ள நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஓர் அச்சடிக்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், மேலதிகமாக 25 போலி 5,000 ரூபா நோட்டுகள், எட்டு போலி 1,000 ரூபா நோட்டுகள் மற்றும் இரண்டு போலி 20 ரூபா நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து மொறட்டுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

