சாவகச்சேரி நகரசபை நாய்கள் காப்பகம் அமைக்க தீர்மானித்துள்ளது.

சாவகச்சேரி நகரசபை நாய்கள் காப்பகம் அமைக்க தீர்மானித்துள்ளது..! உபதவிசாளர் கிஷோர் தெரிவிப்பு.

நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு 15/07 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையினை முன்வைத்து உரையாற்றினார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

நகரத்தில் கட்டாக்காலி நாய்களினால் பொதுமக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்குவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றது.

நாய்களை நகரத்தில் இருந்து அகற்றி கருத்தடை செய்து பாராமரிக்க வேண்டிய தேவை உள்ளது.

வெறுமனே வீதிகளில் திரிகின்ற நாய்களுக்கு உணவினை போடுவது மட்டும் ஜீவகாருண்யம் இல்லை. நாய்களை உரிய முறையில் சிகிச்சையளித்து கருத்தடை செய்து பராமரிக்க வேண்டும்.

எனவே எமது நகரசபை எல்லைக்குள் உள்ள கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கால்நடை வைத்தியசாலை அமைந்துள்ள சூழலில் நாய்கள் காப்பகம் ஒன்றை அமைக்கவேண்டும்.

இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நாய்கள் காப்பகம் அமைக்கும் பணியை எமது சாவகச்சேரி நகராட்சி மன்றமே முதன்முதலில் முன்னெடுப்பதாக இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரும் எமது முன்மாதிரியான வேலைத்திட்டத்திற்கு பெரும் பங்களிப்பினை வழங்குவார்கள் என தனது பிரேரணையை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.

குறித்த பிரேரணையை சபை உறுப்பினர்கள் வரவேற்றிருப்பதாகவும், கடந்த காலங்களில் தனியார் அமைப்புக்கள் நாய்கள் காப்பகம் அமைத்து இடைநடுவில் கைவிட்டதினை போலல்லாமல் சிறப்பாக தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததோடு குறித்த பிரேரணையினை ஏகமனதாக நிறைவேற்றியிருந்தனர் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin