இலங்கை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை: 2,30,000க்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி! மொழிப் பாடங்களில் முன்னேற்றம்!
அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 230,026 மாணவர்கள் உயர்தர (A/L) கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளில் 73.45% ஆகும்.
அனைத்துப் பாடங்களிலும் “A” தரப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 (மொத்தப் பரீட்சார்த்திகளில் 4.15%) என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், முக்கிய மொழிப் பாடங்களான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சித்தி வீதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆங்கில மொழியில் சித்தி வீதம் 73.82% ஆக கணிசமாக உயர்ந்துள்ளது, அதேவேளை பௌத்த சமயத்தில் 83.31% சித்தி வீதம் பதிவாகியுள்ளது.
மாணவர்கள் இப்போது தங்கள் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் அணுகலாம். பாடசாலை அதிபர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் பெறுபேற்றுத் தாள்களைப் பதிவிறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை மட்ட அணுகல் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதுடன், மாகாண மட்ட அணுகல் நாளை முதல் ஆரம்பமாகும்.
பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்ப தவணை ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை திறந்திருக்கும்.
அடுத்த சாதாரண தரப் பரீட்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆணையாளர் நாயகம், 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தினார்.

