யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சுற்றுலாப் படகு மூழ்கியது: 14 பேரும் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சுற்றுலாப் படகு மூழ்கியது: 14 பேரும் உயிர் தப்பினர்

நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்ற சுற்றுலாப் படகு இன்று மாலை ஆழ்கடலில் மூழ்கியதில், அதில் பயணித்த 12 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் உட்பட 14 பேரும் அதிசயமாக உயிர் தப்பினர்.

நெடுந்தீவு உள்ளூர் ஒருவருக்குச் சொந்தமான இந்தச் சிறிய படகு, தனது பயணத்தின் போது இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகி, படகிற்குள் கடல் நீர் வேகமாக நுழையத் தொடங்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இரு ஊழியர்களும் வெள்ளைக் கொடியசைத்து ஆபத்து சமிக்ஞையை வெளிப்படுத்தினர். இவர்களின் அவசர சமிக்ஞையை அவ்வழியே சென்ற மற்றொரு படகு அவதானித்து, உடனடியாக உதவிக்கு விரைந்தது.
படகு மூழ்கத் தொடங்கியதும், அதில் இருந்தவர்கள் மீட்புப் படகிற்கு மாற்றப்பட்டனர். 12 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இருவர், படகு முழுமையாக மூழ்குவதற்கு முன், நீந்திச் சென்று மீட்புப் படகில் ஏறினர்.

சம்பவம் குறித்து அறிந்த இலங்கை கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டவர்களைத் தங்கள் படகிற்கு மாற்றி, குறிகட்டுவான் கரைக்கு பத்திரமாக அழைத்து வந்தனர்.
குருகட்டுவான் மற்றும் நெடுந்தீவு இடையேயான கடல் பயணம் வழக்கமாக சுமார் ஒரு மணிநேரம் எடுக்கும் நிலையில், இந்தச் சம்பவம் பயணிகள் படகுகளைக் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்ற அவசர கோரிக்கையை எழுப்பியுள்ளது. அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பு உபகரணங்களை அணிவதை கட்டாயமாக்குவதுடன், தொடர்புடைய அதிகாரிகள் மற்ற அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin