டெல்லியில் நிலநடுக்கம்: ஹரியானாவில் 4.4 ரிக்டர் அளவில் அதிர்வு
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) பல பகுதிகளில் இன்று காலை கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. காலை 9.04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் பல பகுதிகளில் வசிப்பவர்கள், மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் ஆடியதால் வீடுகளை விட்டு வெளியேறினர். நொய்டா மற்றும் குருகிராமில் உள்ள அலுவலகப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
ஜஜ்ஜாரில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட் மற்றும் ஷாம்லி வரையிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கம் தங்கள் வாழ்க்கையிலேயே உணரப்பட்டநீண்ட நேர நிலநடுக்கம் என்று பலர் தெரிவித்துள்ளனர்.

