தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் பெருவெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இதனால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவு, பல்லாயிரக்கணக்கான மக்களை வீடிழக்கச் செய்துள்ளதுடன், வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
மொசாம்பிக்கில் மட்டும் மின்னல் தாக்குதல், வெள்ளத்தில் மூழ்கியமை மற்றும் வீடுகள் இடிந்ததில் 103 பேர் பலியாகியுள்ளனர். ஜிம்பாப்வேயில் 70 பேரும், தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணங்களில் குறைந்தது 30 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றான தென்னாப்பிரிக்காவின் கிருகர் தேசியப் பூங்கா (Kruger National Park) வெள்ளத்தால் சூழப்பட்டது. அங்கு சிக்கியிருந்த சுமார் 600 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உலங்குவானூர்திகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மொசாம்பிக்கில் சுமார் 70,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இது அப்பிராந்தியத்தில் கடும் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.
வீடுகளின் கூரைகள் மற்றும் மரங்களின் மேல் தஞ்சமடைந்த மக்களை மீட்க தென்னாப்பிரிக்க மற்றும் மொசாம்பிக் நாட்டு ராணுவத்தினர் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள ‘லா நினா’ (La Niña) காலநிலை மாற்றமே இந்தப் பெருமழைக்குக் காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பல வீடுகள் பூமியிலிருந்தே துடைத்தெறியப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

