அம்புலுவாவ மலையில் அபாயம் : 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!
டித்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடும் மழையைத் தொடர்ந்து, கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும் 23 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) பரிந்துரை வழங்கியுள்ளது.
அம்புலுவாவ மலையில் மூன்று இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவை ‘அதி அபாய வலயங்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை வீழ்ச்சி 75 மி.மீ காணப்பட்டால் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் 100 மி.மீ இருந்தால் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் 150 மி.மீ காணப்பட்டால் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும்எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கம்பளை ஜினராஜ ஆண்கள் வித்தியாலயம் மற்றும் மாதிரி ஆரம்ப பாடசாலை ஆகியன அமைந்துள்ளன.
கடந்த நவம்பர் 27-ம் திகதி, ஜினராஜ வித்தியாலய ஆசிரியர் ஒருவர் அம்புலுவாவ மலையிலிருந்து வந்த நீர் மற்றும் பாறைகளால் அடித்துச் செல்லப்பட்டு, பாடசாலை மைதானத்தில் மண்ணில் புதையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடபலாத்த பிரதேச செயலாளர் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு இது குறித்த 03 ஆய்வு அறிக்கைகளை NBRO சமர்ப்பித்துள்ளது.

