சமூக ஊடகங்கள்… நீதிமன்றங்களா?
பொதுவாக தனிநபர்களை குறிப்பிட்டு பதிவிடுவதை நான் விரும்புவதில்லை. காரணம், பிறர் வாழ்க்கையில் என் கருத்துகளைத் திணிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
சமீபத்தில், ஒரு கேரள பெண் பஸ்ஸில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி வீடியோ வெளிட்டார், அது சமூக ஊடகங்களில் வைரலானது. உண்மை முழுமையாக உறுதி செய்யப்படுவதற்குள், குற்றம் சாட்டப்பட்ட நபர் கடும் அவமானத்துக்கும் சமூக அழுத்தத்துக்கும் உள்ளாகி, இறுதியில் தவறான முடிவெடுத்து விட்டார்.
இதற்கு முன்பும், ஒரு சகோதரி தனது கலாச்சார உடையில் டிக் டாக் செய்ததற்காக சமூக ஊடகங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த சம்பவங்கள் ஒன்றை தெளிவாக காட்டுகின்றன: சமூக ஊடகங்களில் நாம் எளிதில் நீதிபதிகளாக மாறுகிறோம்.
உண்மை என்ன என்பதை முழுமையாக அறியாமலேயே கருத்து சொல்லும் ஒவ்வொரு செயலும், ஒருவரின் மரியாதையையும், மனநிலையையும், சில சமயங்களில் மொத்த வாழ்வையும் அழிக்கக்கூடியது.
இங்கு யார் முழுமையாக சரி, யார் முழுமையாக தவறு என்று தீர்ப்பளிப்பது என் நோக்கம் அல்ல. ஆனால் ஒன்று மட்டும் உறுதி: சமூக ஊடகங்கள் சட்டத்தை மாற்ற முடியாது.
உங்களுக்கு அநீதி நடந்தால், சட்டத்தின் உதவியை நாடுங்கள்.
சமூக ஊடகங்கள் நீதிமன்றங்களும் அல்ல —
அங்கு விமர்சனம் செய்பவர்கள் நீதிமான்களும் அல்ல.
கருத்து சொல்வதற்கு முன், அதன் விலை என்ன என்பதை சிந்திப்பது நம்முடைய பொறுப்பு. இனியேனும் உணர்ந்து செயற்படுவோம்.

