வடக்கு புகையிரத அட்டவணையில் மாற்றம்: நாளை முதல் அமுல்!
பொதுமக்களின் பலத்த கோரிக்கைக்கு இணங்க, வடக்கு புகையிரத மார்க்கத்தில் புகையிரத அட்டவணையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நாளை (ஜூலை 7) முதல் அமுலுக்கு வரும்.
இதற்கமைய, மவுண்ட்லவினியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் வார இறுதி நாட்களில் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்த அதிவேக புகையிரதம், இனிமேல் தினமும் மவுண்ட்லவினியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும். வடக்கு மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தினசரி மேம்பட்ட இணைப்பை வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
அதேவேளையில், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பிரபலமான யாழ் தேவி புகையிரதத்தின் புறப்படும் நேரமும் திருத்தப்பட்டுள்ளது. முன்னர் அதிகாலை 5:45 இற்கு புறப்பட்ட இந்த புகையிரதம், நாளை முதல் தினமும் காலை 6:40 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும்.
கடந்த ஒரு மாதமாக யாழ் தேவி புகையிரதத்திற்கு ஆசனங்களை முன்பதிவு செய்த அனைத்துப் பயணிகளும் புதிய புறப்படும் நேரமான காலை 6:40 ஐக் கவனத்தில் கொள்ளுமாறு புகையிரத திணைக்களம் தனது உத்தியோகபூர்வ அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

