குச்சவெளி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது..!

குச்சவெளி பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் வசமானது..!

குச்சவெளி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக அயினியப்பிள்ளை முபாறக், உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மொஹம்மது றிசாத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளர் பதவிக்காக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினரான அயினியப்பிள்ளை முபாறக் என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரல் முன்மொழிந்தது. அதேநேரம் அகில இலங்கை முஸ்ஸீம் காங்கிரஸ் உறுப்பினர் அப்துல் மனாப் ரிஸான் என்பவரை அதே கட்சி முன் மொழிந்திருந்;தது.

இந்நிலையில் குறித்த தெரிவு பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது 06 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பினை கோரி சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். இதன் பின்னர் இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் அயினியப்பிள்ளை முபாறக் என்பவருக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 5 பேர், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 2 பேர், தமிழரசுக் கட்சி உறுப்பினர் – 1, சுயேட்சைக்குழு உறுப்பினர் – 1 உட்பட 9 உறுபினர்கள் வாக்களித்திருந்தனர். இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் அயினியப்பிள்ளை முபாறக் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வஹார்தீன் மொஹம்மது றிசாத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான உடன்படிக்கையின்படி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் தவிசாளர் பதவியை வகிப்பது என்றும் தொடர்ந்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் தவிசாளர் பதவியை வகிப்பது என்றும் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் 3 பேர் தவிசாளர் தெரிவின்போது தவிசாளராக போட்டியிட்ட முபாறக் என்பவர்மீது அதிருப்தியை வெளியிட்டு சபையை விட்டு வெளியேறிய காரணத்தினால் 30 வருடங்களுக்குப் பின்னர் தமிழர் ஒருவருக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

Recommended For You

About the Author: admin