பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச காணொளி எடுத்து துன்புறுத்திய சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

இது தொடர்பான காணொளிக் காட்சிகள் வெளியாகி, அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. மாநிலம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு மே, 21ஆம் திகதி கோவை மகளிர் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு ‘இன்கேமரா’ முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து, தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினிதேவி அதிரடி தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிப்பட்டுள்ளது.

முன்னதாக, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒன்பது பேரும் பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வரப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனிடையே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin