காஷ்மீரின் பந்திப்போராவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதியும், தளபதியுமான அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீர் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் பொறுப்பேற்ற நிலையில் இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு இந்தியா தயாராகி வருகிறது. தற்போது வரை எந்த பயங்கரவாதிகளும் சிக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீரில் அவர்களை தேடும் பணியில் இராணுவத்தினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியும், அந்த அமைப்பின் கமாண்டருமான அல்தாப் லல்லி பந்திப்போராவில் பதுங்கி இருப்பதாக இந்திய இராணுவத்திற்கு இன்று காலையில் இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இராணுவத்தினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் பொலிஸார் தீவிர தேடுதல் பணிகளை முன்னெடுத்தனர்.
இதன்போது இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு இந்திய இராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.
இதன்போது லஷ்கர் இ தொய்பாவின் தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

