
இந்திய பிரதமர் மோடி இன்று இராமேஸ்வரம் செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு இராமநாதசுவாமி கோயில் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் இராமேஸ்வரம் – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரையிலும் வாகனங்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் செல்கிறார். முன்னதாக இலங்கை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்தின் மத்திய பகுதிக்கு சென்று பகல் 12.00 மணியளவில் புதிய பாம்பன் ரயில் பாலத்தை கொடி அசைத்து திறந்து வைத்து பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்திலிருந்து 12.30 மணியளவில் புறப்பட்டு நேராக இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை, இராமேஸ்வரம் – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும், அதுபோல இராமேஸ்வரம் நகரத்திற்குள் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அறிவித்துள்ளது.