
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 442 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.
இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியன்மாரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு உதவ இந்தியா சார்பில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தியா சார்பில் மியன்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 100 தொன் அளவிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், மியன்மாருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளன.
இதனிடையே, நேற்று இந்தியா சார்பில் 442 மெட்ரிக் தொன் எடையுடைய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. யாங்கூன் நகரின் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள திலவா துறைமுகத்தில் இந்த உணவுப் பொருள்கள், யாங்கூன் மாகாண முதல்வரிடம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான தகவல் யாங்கூனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.