மன்னாரில் திருடப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் பொலிஸாரினால் மீட்பு.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால் இன்றைய தினம் சனிக்கிழமை (15) மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக்க வின் பணிப்புரைக்கு அமைவாக குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி மகேஷ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் மற்றும் விசாரணைகளின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 28 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த 28,29,33 வயதுடைய நபர்கள் எனவும் கைது செய்யப்பட்ட மூவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI