
வடக்கு மற்றும் கிழக்கில் 92,000 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையான வருமான வழிமுறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேடத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை.
பெண்தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க புதிய திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.குகதாசன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (25-02-2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் விரிவாக்கமானது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நம்பிக்கைக்குரிய ஒரு படியாகும்.
பொருளாதார மாற்றச் சட்டத் திருத்தம், அரச-தனியார் கூட்டுச் சட்ட அறிமுகம் முதலியன வணிக நம்பிக்கை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளன.
எனினும், இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது எந்தக் குறிப்பிட்ட தொழில்கள் பயனடையும் என்பது பற்றிய தெளிவான வரைபடத்தை அரசாங்கம் முன்வைக்கவில்லை.
மேலும், குறைவான பயன்பாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விடுவதானது, பொருண்மிய உற்பத்தியை ஊக்குவிக்கும் என்றாலும், தவறான பயன்பாடு அல்லது ஊழலைத் தவிர்க்கும் செயல்முறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.
புதிய முயற்சியாளரும் சிறிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தத்தம் செயல்பாடுகளை விரிவாக்க சிறப்பான வரி விலக்கு மற்றும் நிதி ஆதரவு வழங்கப் படவில்லை.
பெறுபேறுகளை அதிகரிக்க வேண்டுமாயின், எண்ம உட்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் புதிய முயற்சிகளுக்குக்கான ஊக்கத்தொகைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரச தெளிவாகக் கோடிட்டுக் காட்ட வேண்டும்.
வாகன இறக்குமதி வரிகள் போன்ற தற்காலிக நடவடிக்கைகளுக்கு அப்பால் நீண்ட கால வருவாய் நிலைத்தன்மையை அரசு எவ்வாறு உறுதி செய்யும் என்பதை குறிப்பிடவில்லை.
அத்தோடு அரச ஊழியர்களின் ஊதியத்தை மூன்று ஆண்டுகளில் 325 பில்லியன் உயர்த்தும் நடவடிக்கையானது வருவாய் வளர்ச்சியுடன் பொருந்தவில்லை என்றால் அது நிதி அழுத்தத்தை மோசமாக்கும்.
நிதி நிலையின் உறுதித் தன்மையைப் பேணும் பொருட்டாக, மாற்று வருவாய் வழிமுறைகள் வரி சீர்திருத்தங்கள்,செலவினக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் உள்ளிட்ட விரிவான நிதி உத்திகளை அரசு அறிவிக்க வேண்டும்.
சமூகப் பாதுகாப்பு செலவினங்களை 232.5 பில்லியன் ரூபாவாக உயர்த்துவதானது, அரசு ஊழியர்களது ஊதியம் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களது கொடுப்பனவை அதிகரித்தல் முதலிய முன் மொழிவுகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதாக இருப்பினும் இவ்வூதிய உயர்வுக்கான படிப்படியான அணுகுமுறையானது அரசின் மீதான அதிருப்திக்கு வழிவகுக்கும்,
மேலும் ஊதிய உயர்வுகள் உற்பத்தித்திறன் வளர்ச்சியுடன் பொருந்தவில்லை என்றால் பணவீக்க அபாயம் உருவாகும்.
இந்த நலத்திட்டங்களுக்கு நிலையான நிதியை எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய விரிவான உத்திகளை அரசு வழங்கவில்லை.
பொருளாதார உறுதித் தன்மையுடன் சமூக நலனை சமநிலைப்படுத்த வேண்டுமாயின், அரசு உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட ஊதிய முறை, பரந்த ஊதிய உயர்வுகளுக்கு மாற்றாக இலக்குப் பணப் பரிமாற்றம், ஒரு கட்டமாக நிதி ஒழுங்கு செய்தல் முதலிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
மேலும் இலங்கை குடித்தொகையில் 52 வீதத்தைக் கொண்ட பெண்கள் மற்றும் சிறார் நலன்களுக்கு பொறுப்பான அமைச்சுக்கு கடந்த நிதியாண்டில் 20 பில்லியன் ஒதுக்கப் பட்டது இந்த நிதியாண்டில் அது 15 பில்லியனாக குறைக்கப் பட்டுள்ளது.
இந்த நாட்டில் பெருந்தொகையான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன.
வடக்கு கிழக்கில் 92000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லைஇ இதனால் இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகளது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது.
எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு கணிசமாக இருந்தபோதிலும், நீர்ப்பாசன மேம்பாடுகள் மற்றும் எந்திரமயமாக்கல் உத்திகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
தொழிற் சந்தை தேவைகளோடு கல்வியை இணைக்கத் தெளிவான திட்டம் எதுவும் இல்லை.
தொழில் பயிற்சி, ஆராய்ச்சி நிதி மற்றும் ளுவுநுஆ (அறிவியல், தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம்) திறன் மேம்பாட்டு திட்டங்களை உள்ளடக்கிய நன்கு வரையறுக்கப்பட்ட உயர்கல்வி சீர்திருத்த உத்தியை அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மோசமான உட்கட்டமைப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட ஆய்வு நிதியினால் பாதிக்கப்பட்டுள்ளன
அறிவு சார்ந்த பொருளாதாரமாக இலங்கை மாறுவதை நோக்கமாகக் கொண்டால், இந்தப் பல்கலைக்கழகங்கள், நவீன வசதிகள், ஆராய்ச்சி நிதி மற்றும் வினைத்திறனான ஆசிரியர்குழுவை கொண்டதாக இருக்க வேண்டும்.
உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டாக உட்கட்டமைப்பு மேம்பாடு ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அரசு, பல இலட்சியச் சீர்திருத்தங்களை அறிவித்தாலும், இந்த முயற்சிகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் ? யார் பொறுப்பேற்பார்கள் ? அல்லது வெற்றியை அளவிட எவ்வாறான அளவீடுகள் பயன்படுத்தப்படும் ? என்பன பற்றிய போதுமான தகவல்களை அரசு வழங்கவில்லை.
இந்தத் தெளிவின்மையானது, குழப்பத்திற்கும், செயல்படுத்துவதில் தாமதத்திற்கு கொள்கை செயற்பாட்டில் திறமை இன்மைக்கும் வழிவகுக்கும் என்றார்