
இலங்கை கடற் பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 32 இந்திய மீனவர்கள் இன்றைய தினம்(23.02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெஃப்டினன் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார் .
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடமத்திய மாகாண கடற்படை தலைமையில் , கூட்டு ரோந்து நடவடிக்கையின் போதே, இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்தனர்.
ஆனால் தாங்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இந்திய மீனவர்கள் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.