
நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களில் 1,400 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறிய பதில் பொலிஸ் மா அதிபர், ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட ஐந்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் ஆயுத தாக்குதல் சம்பவங்களில் 17 சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
சில சம்பவங்களில் பொலிஸார் மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புப்பட்டுள்ளதாகவும், அதன்படி, அந்த அதிகாரிகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், 13, T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75 போர்-12 துப்பாக்கிகள், 7 ரிப்பீட்டர்கள், 805 உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் பிற துப்பாக்கிகள் நான்கும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
1997 என்ற இலக்கம் ஊடாக இதுபோன்ற தகவல்களை வழங்க முடியும் என்றும் டி-56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 லட்சம் ரூபாய் வரை பணப் பரிசில் வழங்கப்படும் எனவும் கூறிய பதில் பொலிஸ்மா அதிபர், தகவல் வழங்குபவர்களின் இரகசியம் பேணப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்