
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் என்ற காரணத்துக்காக, இளைஞர் ஒருவரை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, கடற்கரை மணலில் முழங்காலிடச் செய்து, அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திக் கொலை செய்த சம்பவமொன்று, ஜா-எல – பமுனுகம, மோர்கன்வத்த பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம், பொதுமக்களின் அறிவிப்பின் பேரில். பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்துள்ள அவ்விளைஞன், 29 வயதுடையவர் என்றும் தங்களுக்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் வழங்கியவர் என்றும், பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறிருக்க, குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டிக் குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என்று, இன்று முற்பகல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
1997 என்ற இலக்கம் ஊடாக இதுபோன்ற தகவல்களை வழங்க முடியும் என்றும் டி-56 ரக துப்பாக்கி குறித்த தகவல்களை வழங்கினால் 10 இலட்சம் ரூபாய் வரை பணப் பரிசில் வழங்கப்படும் எனவும் கூறிய பதில் பொலிஸ் மா அதிபர், தகவல் வழங்குபவர்களின் இரகசியம் பேணப்படும் என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது.