
இந்தியாவில் முதல் முறை நடைபெறவுள்ள மூத்த வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி பயணமாகவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 16 ஆம் திகதி வரை நடைபெறும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடருக்கு 13 பேர் கொண்ட இலங்கை மூத்தோர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் தற்போதைய தேர்வுக் குழு தலைவர் உபுல் தரங்க, முன்னாள் விக்கெட் காப்பாளர் ரொமேஷ் களுவிதாரண ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தொடரில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் பங்கேற்கின்றன. இதன் முதல் போட்டியில் இலங்கை மூத்தோர் அணி சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மூத்தோர் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி நவி மும்பையில் பெப்ரவரி 22 ஆம் திகதி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகும்.
இலங்கை மாஸ்டர்ஸ் அணி: குமார் சங்கக்கார (தலைவர்), உபுல் தரங்க, ரொமேஷ் களுவிதாரண, லஹிரு திரிமான்ன, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், இசுரு உதான, டில்ருவன் பெரேரா, சீகுகே பிரசன்ன, தம்மிக்க பிரசாத், சத்துரங்க டி சில்வா, சிந்தக்க ஜயசிங்க, நுவன் பிரதீப்