எரிபொருள் விலை குறைக்கப்படாமை குறித்து அமைச்சரின் கருத்து…
எரிபொருள் விலை திருத்தங்கள் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களை பிரதிபலிக்கும் விலை நிர்ணய சூத்திரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாக வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உலகளாவிய போக்குகளுடன் ஒத்துப்போகும் விலை நிர்ணய சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் மாறுவதாக அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பிரகாரம், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்றும், அதற்கேற்ப விலைகள் அதிகரிக்கும் அல்லது குறையும் எனவும் அமைச்சர் வசந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த ஊடகவியாலாளர் சந்திப்பில், தொழிற்சாலைகளுக்கு 30% மின்சார கட்டணக் குறைப்பு உட்பட பொருளாதார நிவாரணங்களை வழங்குவதற்கான அரசாங்க நடவடிக்கைகளையும் அமைச்சர் தெளிவு படுத்தியதோடு, அவை பொதுமக்களுக்கும் மறைமுகமாக பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு அரசாங்கமாக, மக்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்க அனைத்துத் துறைகளிலும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் நிறுவனங்களை வலுப்படுத்துவது, குடிமக்களைப் பாதுகாப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே தங்கள் நோக்கம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.