அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்டதாலும், தொடர்ச்சியாகப் பெய்துவரும் கன மழை காரணமாகவும் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சவளக்கடை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரும்போகத்திற்காக 2 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி, 5ஆம் கொலனி , போன்ற பல்வேறு பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குடலைப்பருவத்தில் இருந்து கதிர்ப் பருவத்திற்கு நெற் பயிர்கள் மாற்றமடையும் வேளை, சீரற்ற காலநிலை நீடித்து வருவதால் விளைச்சல் பெரும் பாதிப்புக்களைச் சந்திக்கும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நெற் செய்கையின் ஆரம்ப காலப்பகுதியிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், அறுவடை நெருங்கி வரும் நிலையிலும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை தம்மை அதிகம் பாதிப்படையச் செய்துள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.