‘நூறு மலர்கள் மலரட்டும்’ புத்தக அரங்க விழா

தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ எனும் தொனிப்பொருளில் யாழ்.வட்டு இந்துக் கல்லூரியில் 24,25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவில் இன்று சனிக்கிழமை(24.09.2022) பிற்பகல் 2.30 மணியளவில் பிரபல நாடக ஆசிரியரும், ஈழத் தமிழ் நாடகத்துறையின் மிகவும் முக்கியத்துவம் பெறும் நெறியாளருமான பு.கணேசராசா தமிழ்த் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற நாடகங்களின் தொகுப்பான ‘பொறுப்பது உன் விதியோ?’ நூல் வெளியீடு இடம்பெறும்.

சிரேஷ்ட சட்டத்தரணியும், எழுத்தாளருமான சோ.தேவராஜா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளரும், காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவருமான சு.சுந்தரசிவம் நூல் வெளியீட்டு உரையினையும், ஆசிரியரும் எழுத்தாளருமான திருமதி. ஸ்ரீலேகா பேரின்பகுமார் நூல் அறிமுக உரையினையும் ஆற்றவுள்ளனர்.

உளவளத் துணையாளர் நா.நவராஜ், ஆசிரியரும், ஓவியருமான க.நிமலதாஸ் ஆகியோர் கருத்துரைகளையும், நூலாசிரியர் பு.கணேசராஜா ஏற்புரையினையும் நிகழ்த்தவுள்ளனர்.

குறித்த நிகழ்வைக் கலாசார உத்தியோகத்தர் ச.தனுஜன் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நூல் வெளியீட்டைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் சண் நாடகக் குழுவினரின் தயாரிப்பில் உருவான தலையெழுத்து மற்றும் வீட்டுக்காரன் ஆகிய நாடகங்களும் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.

Recommended For You

About the Author: webeditor