பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள்!

இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடமாகாணத்தில் இந்த ஆண்டில் கடந்த ஆறு மாத காலப் பகுதியில் சடுதியாக அதிகரித்துள்ளது என வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் இ.குருபரன் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதில் யாழ்.மாவட்டத்திலேயே அதிகளவான பிள்ளைகள் இவ்வாறு சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் ஒப்படைக்கப்ப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பெற்றோரால் பராமரிக்க முடியாத நிலையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டு 281 ஆகக் காணப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 259 ஆகக் குறைவடைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு 174 ஆக அது வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை 2021 ஆம் ஆண்டு 158 ஆக அந்த எண்ணிக்கை மிகப் பெரிய சரிவைக் கண்டுள்ளது. ஆனால், நாட்டில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நடப்பு ஆண்டில் முதலாவது அரையாண்டில் மாத்திரம் 246 பேர் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் 124 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7 பேரும், வவுனியா மாவட்டத்தில் 8 பேருமாக 246 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சடுதியான எண்ணிக்கை அதிகரிப்புக்கான காரணம் தொடர்பில் வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் தமது ஊடக அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தினார்.

இது பொருளாதார நெருக்கடி காரணமாகவே பெற்றோர் தம்மால் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாது என்று கூறுகின்றனர்.

எமக்கு கிடைக்கப்பெறும் ஒவ்வொரு கோரிக்கை தொடர்பிலும் கலந்துரையாடல் நடத்தப்பட்டு உண்மையில் பெற்றோரால் பராமரிக்க முடியாது தான் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வடக்கு மாகாணத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர் என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor