போக்குவரத்து முறைப்பாடுகளை இனி உடன் வழங்க e-Traffic
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸ் திணைக்களம், e-Traffic மொபைல் ஃபோன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இன்று (01) பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, இந்த கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த மொபைல் செயலி மூலம், பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் போக்குவரத்து முறைகேடுகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாக E-servicesஐ அணுகுவதன் மூலம் e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை இலகுவாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்ய முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம், உங்களது முறைப்பாடுகளை உடனடியாக பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய 607 பொலிஸ் நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர். மேலும், இந்த e-Traffic கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்துவதன் மூலம், தினசரி வாகன விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அப்ளிகேஷனில் உள்ள Camera option icon அல்லது Video option iconஐ பயன்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் பிற சாலை தொடர்பான சம்பவங்களை, பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்ப முடியும்.
இவ்வாறாக வழங்கப்பட்ட தகவல்களின்படி, போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் பிற சம்பவங்களை பொலிஸ் தலைமையகம் விசாரணை செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பும்.
விசாரணைகளின் முன்னேற்றத்தை பொலிஸ் தலைமையகம் கண்காணிக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.