வட்ஸ்அப் மற்றும் கூகுள் பிளே ஆகிய வலைத்தளங்களின் தடைகளை ஈரான் தளா்த்தியுள்ளதாக அந் நாட்டின் அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இணையத் தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் முதற் கட்டமாக மெட்டாவின் உடனடி செய்தி தளமான வாட்ஸ்அப் மற்றும் கூகுள் பிளே மீதான தடையை ஈரானிய அதிகாரிகள் நீக்கியுள்ளனர் என ஈரானிய அரச ஊடகம் கடந்த செவ்வாய்கிழமை (24) செய்தி வெளியிட்டிருந்தது.
ஈரான் இஸ்லாமிய குடியரசு உலகில் இணைய சேவைகளை பெற்றுக்கொள்வதில் சில இறுக்கமான கட்டுப்பாடுகளைக் விதித்துள்ளது, எனினும் தொழில்நுட்பத்தில் ஆா்வம் கொண்ட ஈரானியர்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சமூக ஊடகங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றை பிரத்தியேக மெய்நிகர் வலையமைப்புக்கள் ஊடாக பயன்படுத்தி வருகின்றனா்.
“வட்ஸ்அப் மற்றும் கூகுள் பிளே போன்ற சில பிரபலமான வெளிநாட்டு தளங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை தளா்த்துவதற்கு சாதகமாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளன” என ஜனாதிபதி மசூட் எஸெஷ்கியானை மேற்கோள்காட்டி ஈரானின் உத்தியோகபூா்வ இர்னா செய்தி நிறுவனம் செவ்வாயன்று தகவல் வெளியிட்டிருந்து.
“இன்று இணைய தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளா்த்துவதற்கான முதல் படி… எடுக்கப்பட்டுள்ளது” என்று ஈரானின் தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் சத்தார் ஹஷேமி கூறியதாகவும் இா்னா தொிவித்திருந்து.
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் சமூக ஊடகங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது