ஈரான் நாட்டில் உள்ள மேற்கு ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கமான சர்ஷூரான் தங்கச் சுரங்கத்தில் அதிகளவில் தங்கத் தாதுகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதேவேளை முன்பு இங்கு 27 டன் அளவுக்குத் தங்கத் தாது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அதை விட 50% அதிக தங்கம் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தங்கம் என்பது பூமியின் பல பகுதிகளில் தாதுக்களாக்கப் புதைந்து இருக்கும். அதன்படி ஈரான் நாட்டிலும் ஒரு தங்கச் சுரங்கம் இருக்கிறது.
அதுதான் சர்ஷூரான் (Zarshouran). கடந்த பல ஆண்டுகளாகவே இங்கிருந்து தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தங்கத் தாது முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸர்ஷூரான் சுரங்கத்தில் இருந்து அதிகளவில் தங்கத்தை வெட்டி எடுக்க முடியும் என கூறப்படுகின்றது. இது தொடர்பாக சர்ஷூரான் சுரங்க நிறுவனத்தின் செயல் தலைவர் முகமது பர்வின் கூறுகையில்,
முன்பு இந்த பகுதியில் 27 மில்லியன் மெட்ரிக் டன் தங்கத் தாது இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், இந்த புதிய ஆய்வில் 4.3 கோடி மெட்ரிக் டன்கள் வரை தங்க தாது இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் சுரங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கக் கூடிய தங்க வளங்களும் 116 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. சுரங்கத்தின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளில் இருந்து 65 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது என்றார்.