அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த ஏழு நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
தண்ணீரில் மிதந்த காரைதீவுக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்காலிகமாக மாவடி பள்ளியில் இணைப்பிலிருந்து குடிநீர் விநியோகத்தை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சாய்ந்தமருது பொறுப்பதிகாரி கஜனி முருகேசு தலைமையில் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி , இயக்கமும் பராமரிப்பும் பிரிவிற்கான பொறியியலாளர் பாக்கியராஜா மயூரதன் மற்றும் காரைதீவு பிரதேச காரியாலய பொறுப்பதிகாரி பொறியியலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் ஆகியோர் காரைதீவு லவன் தலைமையிலான இராவணா இளைஞர்களின் உதவியுடன் இரவு பகலாக முயற்சி செய்த போதிலும் போதிய பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.
குறித்த தாழ்நிலப் பகுதிகளில் மாத்திரம் குறைந்தளவு நீர் வந்தது. அதுவும் நேற்று (01) தடைபட்டது.
இதனால் கடந்த 6,7 நாட்களாக காரைதீவு பெரும்பாக பகுதிக்கு குடிநீர் விநியோகம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலத்தை அசௌகரியத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
அவ்வேளையில் சித்தானைக்குட்டி ஆலயம் பிரதேச சபை சில தனியார் மற்றும் இராவணா அமைப்பினர் பவுசர் மூலம் வீதி வீதியாக குடிநீர் வழங்கிவருகின்றனர்.
எனினும் பிரதான நீர் விநியோகம் சீர்செய்வது தொடர்பில் இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையைத் தவிர வேறு யாரும் கவனம் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இத்தடை தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் உயர் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
பிரதான குடிநீர் விநியோகம் கிடைக்க மேலும் 2 அல்லது 3 நாட்களாவது செல்லும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.